உபியில் மீண்டும் கொடூரம் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது. இதன் பின்னர் ஒரு 17 வயது சிறுமியும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த குழந்தையின் உடல் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் கிடந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த குழந்தையும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 20 நாளில் இது மூன்றாவது கொடூர சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.