பாஜக கூற்றை மாற்றி பேசியதால் எஸ்பிக்கு தண்டனையா?!.. ராமநாதபுரம் சர்ச்சை
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் 31ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு கும்பல், நண்பர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது. இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அருண் பிரகாஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலையான அருண் பிரகாஷ் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது, அவரின் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனையடுத்தே அருண் பிரகாஷை கொலை செய்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை சொன்னவர்கள் பாஜகவினர். மேலும், ``விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக அருண்குமார் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. முதல்வர் பழனிசாமி எந்த பாரபட்சமும் இன்றி இந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெளிப்படையாக கூறியிருந்தது.
பாஜக சொன்ன மறுநாளே ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாரோ, ``கொலைக்கு தனிப்பட விரோதம் தான் காரணம், மத சாயம் பூசாதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, பாஜக குற்றச்சாட்டை மறுத்து பேசிய மறுநாளே அதாவது நேற்று எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருண்குமார் மீதான நடவடிக்கைக்கு பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறத்தொடங்கியுள்ளன. இதனால் ராமநாதபுரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.