உங்களது சொந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையா?
உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது. ஆனால் தென்கொரிய நாட்டுக்குச் சென்றால் உங்களுக்கு உங்களது சொந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். என்ன நம்ப முடியவில்லையா? உண்மை தான்....அந்த நாட்டிலுள்ள ஒரு நிறுவனம்தான் இந்த ஒரு வித்தியாசமான, யாருமே நினைத்து பார்க்காத ஒரு முயற்சியை எடுத்தது. கடந்த 2012ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வயதானவர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருப்பார்கள் என கருதி விட வேண்டாம். இளம் பெண்களும், இளைஞர்களும் கூட தங்களது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இந்த இதில் கலந்துகொள்ள விரும்புவர்களுக்கு பிரத்தியேகமான உடை வழங்கப்படும். 10 நிமிடம் வரை சவப்பெட்டியில் படுத்திருக்கலாம். இதன் பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கும். நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் அவரிடமே கொடுக்கப்படும். தங்களது மரணத்திற்குப் பின்னர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி எப்படி நடைபெறும் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொண்ட சோ ஜெய் ஹீ என்பவர் கூறுகையில், 'நீங்கள் உங்களது மரணத்தை குறித்து நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுக்க அது தூண்டுகோலாக இருக்கும் என்கிறார். 'சவப்பெட்டியில் நான் படுத்திருந்த சில நிமிடங்கள் என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது. எப்போதும் நான் மற்றவர்களை எதிரிகளாக மட்டுமே கண்டு வாழ்ந்து வந்துள்ளேன்.
சவப்பெட்டியில் இருந்தபோது எதற்காக இப்படி அனைவரையும் எதிரிகளாக கருதி வாழ வேண்டுமென எனக்கு தோன்றியது' என்கிறார் தென்கொரிய பல்கலைக்கழக மாணவி ஜோயி ஜின் கியு. தென்கொரியாவில் உள்ள அசான் மருத்துவ மைய பேராசிரியரும், மரணத்தைக் குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதியவருமான யு சில் கூறுகையில், 'இளமையிலேயே அனைவரும் தங்களது மரணத்தைக் குறித்து படித்து உயிர்களுக்கு இருக்கும் மதிப்பை புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்' என்றார்.