இஞ்சியோன் செயல்திட்டம் என்றால் என்ன..இது யாருக்காக உருவாக்கப்பட்டது?

இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய - பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். இந்த செயல்திட்டத்தில் மாற்றுத்திறனை உள்ளடக்கிய சில வளர்ச்சி இலக்குகள் உள்ளன.

"இஞ்சியோன் செயல்திட்டம் " என்று இதற்கு பெயர் வந்ததற்கு காரணம் இந்த செயல்திட்டம் கொரிய நகரமான இன்சியோனில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான்.

இந்த இலக்குகள் உலக வரலாற்றில் முதன்முறையாக பிராந்திய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தென் கொரியாவின் இன்சியோன் நகரில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார, சமூக ஆணையத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த செயல்திட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மொத்தம் 65 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், உரிமைகளை முழுமையாக கிடைக்கச் செய்தல் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தை கண்காணிக்க இந்த இலக்குகள் உதவும். இந்த செயல்திட்டம் 2013 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இந்த செயல்திட்டத்தில் மொத்தம் 10 லட்சியங்கள் உள்ளன. இந்த 10 இலட்சியங்களில் 27 செயல்திட்ட இலக்குகள், முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான 62 அளவீட்டுக் காரணிகள் ஆகியவை அடங்கியுள்ளன. இன்சியோன் செயல்திட்டத்தின்படி அனைத்து அரசுகளும் அவர்களின் நாட்டில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களையும் திரட்டித்தர வேண்டும். அப்போது தான் அவர்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட முடியும் என்பதால் இந்த தகவல்கள் கோரப்படுகின்றன.

இன்சியோன் மனித செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது மாற்றுத்திறன் கொண்ட மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்; அவர்களின் விருப்பத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்; பாகுபாடு காட்டப்படக் கூடாது; மற்றவர்களைப் போலவே சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் ஆகியவை ஆகும்.

இஞ்சியோன் செயல்திட்டத்தின் லட்சியங்கள்:

வறுமை ஒழிப்பு, பணி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்,அரசியல் நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல். இயல் சூழல், பொதுப்போக்குவரத்து, அறிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை அணுகுவதற்கான சூழலை அதிகரித்தல்,சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்தை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகளை விரிவாக்குதல், பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பேரிடர் பாதிப்பு குறைப்பு மற்றும் மேலாண்மையை உறுதி செய்தல். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை மேம்படுத்துதல், மாற்றுத்திறன் கொண்டவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதையும், அதனடிப்படையில் தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்படுவதையும் உறுதி செய்தல்,மண்டல, உள்மண்டலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

2017 நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் ஆசிய-பசிஃபிக் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பத்தாண்டு (2013-2022) இடைக்கால பரிசீலனைக் குறித்த அரசுகளுக்கு இடையேயான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவார்சந்த் கேலாட் தலைமையான குழு சென்றுள்ளது. இத்துறையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அதில் அவர்கள் இந்தியா அனைத்துத் தனிநபர்களுக்கும் சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளையும் அவர் மேற்கோள் காட்டினார். மாற்றுத் திறனுடையோரின் உரிமைகள் குறித்த ஐ.நா. சபையின் சிறப்பு மாநாட்டின் விதிகளுக்கு உகந்த வகையில் “2016ஆம் ஆண்டின் மாற்றுத் திறனுடையோரின் உரிமைகளுக்கான சட்டம்” என்ற புதியதொரு சட்டத்தையும் இந்தியா நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியது இந்த சட்டம் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் தங்கள் உரிமைகளை சரிசமமாக அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 4 சதவீத ஒதுக்கீடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வீட்டுமனைக்கான ஒதுக்கீடு, சலுகை வட்டியில் வர்த்தகம் செய்வதற்கான நிதியுதவி ஆகியவற்றில் 5 சதவீத ஒதுக்கீடு, போன்றவையும் இச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள சில முக்கியமான சாதகமான நடவடிக்கைகளாகும்.

இந்த மாற்றுத் திறனாளிகளை சிறப்பாகச் சுட்டிக் காட்டும் வகையில் “தெய்வீகத் திறன் பெற்றவர்கள்” என்ற புதியதொரு வார்த்தையை இந்தியப் பிரதமர் உருவாக்கியிருக்கிறார் என்றும் திரு. கேலாட் குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கென தடைகளற்ற சூழ்நிலையை உருவாக்க முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட, ”எளிதில் அணுகத்தக்க இந்தியா” என்ற பிரச்சார இயக்கம் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.

More News >>