லவ் ஜிகாத் அசாம் டிவி தொடருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் 'பேகம் ஜான்' என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிகள் 'லவ் ஜிகாத்'தை ஊக்குவிப்பது போல இருப்பதாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூட இந்து ஜாக்ரண் உட்பட சில இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவுகாத்தி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். இந்த டிவி தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இதையடுத்து கடந்த மாதம் 24ம் தேதி பேகம் ஜான் தொடருக்கு போலீஸ் கமிஷனர் குப்தா தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தனியார் டிவி மற்றும் தொடரின் தயாரிப்பாளர்கள் சார்பில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேகம் ஜான் டிவி தொடருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கூறிய நிபந்தனைகளின் படியே தங்களது டிவி தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் இதற்குத் தடை விதித்தது செல்லாது என்றும் தொடர் தயாரிப்பாளர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது