கொரோனாவுக்கு இதுவரை 7,000 சுகாதாரத் துறையினர் மரணம்
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதின் மூலம் டாக்டர்கள், நர்சுகள் உட்படச் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் தான் மிக அதிகமாக 1,300 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 1,077 பேரும், இந்தியாவில் 573 பேரும் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவத் தொடங்கி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் மெக்சிகோ, பிரேசில், அமெரிக்கா உள்பட நாடுகளில் இதன் தீவிரம் இப்போதும் மிக மோசமான அளவில் உள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர் ஸ்டீவ் காக்பென் கூறியுள்ளார்.