அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும்.. சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால் ``அரசால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடியாது. தேர்வுகளை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி புதுக்குண்டைப் போட்டார்.
இது ஒருபுறம் இருக்க, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவோ, `` அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே AICTE-ன் விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும். எனினும் இதில் அரசு முடிவெடுக்கும்" என்று கூறினார். இது புது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சூரப்பா அறிவிப்பு குறித்து, ``அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும்; அரசின் முடிவில் மாற்றமில்லை. சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாகத் திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ஏஐசிடிஇ எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே, கல்லூரி அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.