திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. பக்தர்களை நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி 5 மாதங்களுக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் 6ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. www.tnhrce.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.