ஹர்பஜனும் அவுட்... அடி மேல் அடியால் கலங்கும் சென்னை ரசிகர்கள்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. எல்லா அணிகளும் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை அணி வீரர்கள் உற்சாகமாகச் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அதே உற்சாகத்தில் துபாயும் கிளம்பிச் சென்றனர். அங்கு தான் வினை ஆரம்பித்தது. சென்னை பயிற்சியினால், 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து, அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ரெய்னா தனது தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக இந்த சீசனில் விளையாட முடியாது என்று கூறி இந்தியா திரும்பினார். இவர் இந்தியா திரும்பிய பிறகு பெரிய சர்ச்சையை வெடித்தது. அந்த சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கும் நெகட்டிவ் என இரண்டாம் முறையாக ரிசல்ட் வர, இன்று வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர் எனக் கூறப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஓரளவு மகிழ்ச்சியில் இருந்த நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சியாக, நட்சத்திர பௌலர் ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் விளையாட முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ``தனிப்பட்ட காரணங்களால் நான் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட மாட்டேன். தற்போது கடினமான காலங்கள். இந்த காலகட்டத்தில் நான் எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட சில தனியுரிமையை எதிர்பார்க்கிறேன். சிஎஸ்கே நிர்வாகம் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. அவர்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.