எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்.. தமிழக அரசு புதுச்சட்டம்..

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வழக்கம் போல் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் முகக்கவசம் அணிதல், இடைவெளி விட்டு நிற்பது போன்றவற்றை கடைப்பிடிப்பதே இல்லை.

இதையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொதுச் சுகாதாரச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசரத் திருத்தச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித ஒப்புதல் கொடுத்துள்ளார். நோய்த் தொற்று தடுப்பு விதிகளை மீறிச் செயல்படுவது, விதிகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்துவது ஆகியவை குற்றம் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் எந்தெந்த குற்றங்களுக்கு எவ்வளவு அபராதம் என்பதற்கான விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது.இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

More News >>