விஜய், அஜீத்தை அடுத்து அரசியலுக்கு வர பிரபல நடிகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு..

நடிகனால் நாடாளமுடியும் என்பதைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நிரூபித்தார். அவரை தொடர்ந்து ஹீரோவாக நடிப்பவர்கள் ரசிகர் கூட்டம் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வர எண்ணுகிறார்கள் அல்லது ரசிகர்களே அவர்களை அரசியலில் குதிக்க அழைக்கிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர அழைத்து அவரது ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர். கடைசியாக ரஜினியும் கடந்த இரண்டு ஆண்டுக்குக் முன்பு கூறும்போது நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி திடீரென்று அரசியலில் குதித்ததுடன் ஒரு முறை தனது கட்சியினரை தேர்தலிலும் போட்டியிட வைத்தார்.

தற்போது தளபதி விஜய்க்கு அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்த வண்ணமிருக்கின்றனர். அதேபோல் அஜீத் ரசிகர்களும் அஜீத்தை அரசியலுக்கு வரக் கேட்கின்றனர். விஜய்யாவது அவ்வப்போது அரசியல் பேசுகிறார். அஜீத் அரசியல் பற்றி வாய் திறப்பதில்லை. ஆனாலும் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மதுரையில் விஜய், அஜீத் ரசிகர்களுக்கிடையே எப்போதும் போஸ்டர் யுத்தம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அஜித் ரசிகர்கள் தற்போது புதுவித சபதத்துடன் ஒரு போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். வலிமை படம் தியேட்டருக்கு வரும் வரை வேறு எந்த படத்தையும் எந்த ஒடிடி தளத்திலும் பார்க்க மாட்டோம் என உறுதி மொழியை ஏற்று அதை போஸ்டராக ஒட்டினர்.

அதேபோல் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடியில் வரக்கூடாது என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டிக் கிடையை தற்போது சூர்யா ரசிகர்களும் போஸ்டர் போட்டியில் களம் இறங்கி இருக்கின்றனர்.செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது. அதை வாழ்த்தியும் என் ஜி கே படத்தில் போராளி சேகுவாரா போல சூர்யா நடித்த தோற்றத்தை போஸ்டரில் வெளியிட்டு, 'திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...' என சூர்யாவுக்கு அரசியலில் குதிக்க அழைப்பு விடுத்திருப்பதுடன் தமிழகச் சட்டமன்றத்தின் படத்தையும் போஸ்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>