பள்ளி ஆசிரியைக்கு எதிராக அவதூறு பரப்பிய வக்கீல் மீது வழக்கு

கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். இதனால் குறுகிய காலத்திலேயே இவருக்கு ஏராளமான விளம்பர வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வக்கீல் இவரை அணுகி தனது நண்பர் ஒருவர் சினிமா எடுப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று ஆசிரியை சாய் ஸ்வேதா கூறியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து சமூக இணையதளங்களில் ஆசிரியை சாய் ஸ்வேதாவுக்கு எதிராக ஆபாசமான கருத்துகள் பகிரப்பட்டன. இது குறித்து அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது, சினிமாவில் நடிக்க மறுத்ததால் ஸ்ரீஜித் தான் இந்த செயலில் ஈடுபட்டார் எனத் தெரியவந்தது. இதையடுத்து சாய் ஸ்வேதா, கேரள முதல்வர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். இதுதவிர மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தார்.

இந்நிலையில் ஆசிரியை சாய் ஸ்வேதாவை அவமானப்படுத்திய வக்கீல் ஸ்ரீஜித்திற்கு எதிராக மாநில மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோழிக்கோடு மாவட்ட எஸ்பிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பள்ளி ஆசிரியைக்கு சமூகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி ஜோசபின் கூறினார்.

More News >>