கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு எதிர்ப்பாற்றல் எத்தனை நாள்கள் இருக்கும்?

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் எத்தனை நாள்கள் எதிர் உயிரி இருக்கும் என்ற ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களைப் பற்றிய ஓர் ஆய்வினை புது டெல்லியிலுள்ள மாக்ஸ் மருத்துவமனையும் அறிவியல் தொழில் ஆய்வு கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து நடத்தின. சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி சாந்தனு சென்குப்தா தலைமையில் இவ்வாய்வு நடத்தப்பட்டது.

மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்கள் உள்ளிட்ட 780 பேரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி நோய்ப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் உடலில் SARS-CoV-2 என்ற கிருமிக்கான எதிர் உயிரி 60 முதல் 80 நாள்கள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாதங்கள் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சுகாதார சேவைப் பணியாளர்கள் மத்தியில் ஏப்ரல் மாதம் 2.3 சதவீதமாக இருந்த கிருமி விகிதாச்சாரம் ஜூலை மாதம் 50.6 சதவீதமாக உயர்ந்திருந்தது. பொது மக்கள் மத்தியில் அந்த விகிதாச்சாரம் 23.5 சதவீதமாக இருந்தது. புது டெல்லியில் ஜூன் 27 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் 23 சதவீதத்தினரின் உடலில் கொரோனா கிருமிக்கான எதிர் உயிரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் அந்த விகிதம் 29 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>