இத்தாலியில் 6 மாத கொரோனா விடுமுறைக்குப் பின் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். மாணவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்யும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் இத்தாலியை விட்டு விலகாததால் பள்ளிகளில் மாணவர்களுக்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளிகளில் இருக்கைகளுக்கு இடையே ஒரு மீட்டர் அகலம் இருந்தால் முகக் கவசம் அணியக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 6 வயதுக்கு மேல் உள்ள மாணவர்கள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழையும்போதும், ஆசிரியர்களிடம் பேசும் போதும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பள்ளி வாகனங்களிலும், மாணவர்கள் பயன்படுத்தும் பொது வாகனங்களிலும் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான முகக் கவசங்கள், சானிட்டைசர் ஆகியவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இது மிகவும் மோசமான வருடமாக இருக்கும் என்று இத்தாலி கல்வித் துறை அமைச்சர் லூசியா அசோலினா கூறியுள்ளார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளன, ஆனால் மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை வரக்கூடாது என்பதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.