தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 4 லட்சம் பேர் மீட்பு.. இயல்பு வாழ்க்கையில் மக்கள்..

தமிழகத்தில் இது வரை 4.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், சுமார் 4 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 51 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். எனினும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில்தான் அதிகமானோருக்கு பரவி வருகிறது. நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் நேற்று(செப்.6) 5870 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 57,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5859 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 98,366 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 61 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7748 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 51,583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று 965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 40,685 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 293 பேருக்கும், கோவையில் 545பேருக்கும், கடலூரில் 434 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 244 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டில் இது வரை 27,947 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,1253 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 26,071 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.எனினும், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பான்மையினர் குணம் அடைந்து வருவதால், இந்நோய் குறித்த அச்சம் போய் விட்டது. இதனால், மக்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளனர். நாளை முதல் வெளியூர்களுக்கு பஸ், ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. எனவே, தியேட்டர், ஷாப்பிங் மால், கல்வி நிறுவனங்களைத் தவிர மீதி அனைத்தும் செயல்படத் தொடங்கியுள்ளது.

More News >>