துளசி போல புனிதமானது கஞ்சா நடிகை பகீர்

சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கன்னட மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருள் சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

இந்நிலையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு துறையின் தீவிர விசாரணையில் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டது கன்னட சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் மலையாளம் மற்றும் கன்னட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கஞ்சா விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று பிரபல கன்னட நடிகை நிவேதிதா தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் மேலும் கூறியிருப்பது: கஞ்சா ஆயுர்வேதத்தின் முதுகெலும்பாக உள்ளது. 1985ம் ஆண்டு தான் கஞ்சா விற்பனை இந்தியாவில் சட்ட விரோதமாக்கப்பட்டது. அதற்கு முன்புவரை ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் கஞ்சா அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. துளசி செடி போல மிகவும் புனிதமான கஞ்சாவுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. ஆயுர்வேதத்தில் இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இதற்கு தடை விதிக்கப்பட்டதின் பின்னணியில் பெரும் சதித்திட்டம் உள்ளது. தற்போதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கஞ்சா விற்பனைக்கு எந்த தடையும் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடிகை நிவேதிதா தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். நிவேதிதாவின் இந்த கருத்துக்கு சமூக இணையதளங்களில் ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக ஏராளமான ட்ரோல்களும் பகிரப்பட்டு வருகிறது.

More News >>