இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனார்: ஓ.பி.எஸ்.-ஐ கலாய்க்கும் டிடிவி தினகரன்

துணை முதல்வர் பதவியேற்றது இன்ஸ்பெக்டரில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்பட்டது போல உள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் 2 லட்சம் பேருக்கு பணம் கொடுத்தும் மக்கள் ஓட்டு போடவில்லை என்ற கோபத்தில் அந்த தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளனர்.

பிரதமர் சொல்லித்தான் ஒன்று சேர்ந்தோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அவர் சொல்லி தான் துணை முதல்வர் பதவியேற்றதாகவும் கூறினார். அவர் கூறுவது இன்ஸ்பெக்டரில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்பட்டது போல உள்ளது.

பிரதமரிடம் நெருக்கமாக இருப்பதை போல் காட்டிக் கொள்ளும் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக பிரதமரை ஏன் இதுவரை சந்தித்து பேசவில்லை? இரட்டை இலையை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆட்சி தொடர வேண்டுமென்றால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

கொடிக்கு கூட வழக்கு போடுகிறார்கள். அவர்கள் சிங்கங்கள் அல்ல. குள்ளநரி வேலை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. 2003-ம் ஆண்டுக்கு முன் அவர் எங்கிருந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. எனக்கு பின்னால் பவ்வியமாக நின்றிருக்கும் படம் என்னிடம் உள்ளது.

2000-க்கு முன்னால் அவர் அம்மாவிடம் எடுத்துக் கொண்ட படம் இருக்கிறதா? வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜின் தம்பி பவ்வியமாக இருந்து வில்லனாக மாறுவார். அந்த வில்லத்தனம் தான் ஓ.பன்னீர்செல்வத்திடமும் உள்ளது. இரட்டை இலையை மீட்கும் வரை குக்கர் சின்னம் இருக்கும். அதிமுகவை மீட்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும். இது கட்சி அல்ல. இடைக்கால ஏற்பாடு தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>