குக்கரில் தங்கம்
இந்தியாவிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் வழியாக பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகத்திலேயே தூதரக பார்சலில் தங்கம் பிடிபடுவது இங்கு தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா காலமாக இருந்த போதிலும் தங்கம் கடத்துவதில் எந்த குறைவும் இல்லை. இந்த நான்கு விமான நிலையங்கள் வழியாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் கடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்துதான் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜித்தாவிலிருந்து கோழிக்கோடு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோழிக்கோட்டை சேர்ந்த ஹம்சா என்பவர் கொண்டு வந்திருந்த குக்கரை திறந்து பரிசோதித்தபோது அதில் 700 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹36 லட்சமாகும். சுங்க இலாகாவினர் அந்த தங்கத்தை கைப்பற்றி ஹம்சாவை கைது செய்தனர்.