மோடியால் மவுசு கூடியது யாருக்கு தெரியுமா?

பொதுவாக நாட்டு நாய்களை யாரும் அதிகமாக கண்டுகொள்வதில்லை. லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட், புல்டாக், பாக்சர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை வளர்க்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி வானொலியில் பேசும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், 'அடுத்த முறை நீங்கள் ஒரு நாயை வீட்டில் வளர்க்க விரும்பினால் இந்திய இனத்தைச் சேர்ந்த நாட்டு நாய்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள்' என்று கூறினார். பிரதமர் இவ்வாறு கூறியது தான் தாமதம், நாட்டு நாய்களுக்கு இப்போது மவுசு அதிகமாகிவிட்டது. பலரும் நாட்டு ரகத்தைச் சேர்ந்த நாய்களை வாங்க போட்டி போட தொடங்கி விட்டனர். இதனால் இவற்றின் விலையும் கிடுகிடுவென உயர தொடங்கிவிட்டது. 'பார்ப்பதற்கே சகிக்காது, பயிற்சி கொடுப்பதும் சிரமம்' என பல காரணங்களால் தான் பலரும் நாட்டு நாய்களை வீட்டில் வளர்க்க தயக்கம் காண்பித்து வந்தனர்.

ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்று கால்நடை மருத்துவர்களும், நாய் பயிற்சியாளர்களும் கூறுகின்றனர். வெளிநாட்டு ரக நாய்களை விட நம் நாட்டு நாய்களுக்குத் தான் அதிக புத்தி இருக்கிறதாம். எளிதில் பயிற்சி அளிக்கவும் முடியுமாம். அதுமட்டுமில்லாமல் நாட்டு நாய்களுக்குத் தான் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. அதிக ஆயுளும் இதற்குத்தான் உண்டு. வெளிநாட்டு ரக நாய்களுக்கு தோல் நோய் உட்பட பல நோய்கள் எளிதில் வர வாய்ப்பு இருக்கிறது. காலநிலை மாறும் போதும் இந்த நாய்களுக்கு நோய் எளிதில் வரும். அவற்றுக்கான சிகிச்சை செலவும் அதிகம். ஆனால் நாட்டு நாய்களுக்கு எளிதில் நோய் வர வாய்ப்பே இல்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருப்பவர்களுடன் மிக எளிதில் நண்பர்கள் ஆகி விடும் என்கிறார் நாட்டு நாய் ஆர்வலரான ஒருவர். ராஜபாளையம், சிப்பிப்பாறை, ராம்பூர் பவுண்ட் உட்பட இந்தியாவில் புகழ்பெற்ற பல நாட்டு நாய் ரகங்கள் உள்ளன. இதில் ராஜபாளையம் நாய்க்கு தான் மவுசு அதிகம். வேட்டையாடுவதற்கு இந்த நாயை விட்டால் வேறு கிடையாது. வலிமையும் அதிகமாகும். நாட்டு நாய்கள் நம்முடைய நாட்டிலேயே வளருவதால் நம் நாட்டின் காலநிலை அதற்கு மிகவும் ஒத்துப்போகும். ஆனால் உயர் ரக வெளிநாட்டு நாய்களுக்கு நமது நாட்டின் காலநிலையுடன் ஒத்துப் போவது பெரும் சிரமம் ஆகும். பல வெளிநாட்டு ரக நாய்களுக்கு ஏசி இல்லாமல் வாழ முடியாது. அதனால்தான் இந்த நாய்களை வளர்ப்பதற்கு செலவு அதிகமாகிறது. பிரதமர் மோடி புண்ணியத்தால் நமது நாட்டு நாய்களுக்கும் சுக்கிரதிசை தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும்.

More News >>