சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பல கட்டங்களாகத் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதன்படி, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையான மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கப்பட்டது. விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் ஆகியோரும் பயணிகளுடன் சென்றனர்.
விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பரங்கிமலை -- சென்ட்ரல் இடையே வரும் 9-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.