தமிழகம் முழுவதும் பஸ், ரயில் சேவை மீண்டும் தொடங்கின..
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தும், சிறப்பு ரயில் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியிருக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஸ், ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மண்டலங்களில் கடந்த ஜூன் 26ம் தேதி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால், ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
அதன் பிறகு, இம்மாதம் 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதன்தொடர்ச்சியாக, இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என்று வெளியூர்களுக்கு வழக்கம் போல் பஸ்களை இயக்கத் தொடங்கியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று தொடங்கியுள்ளது.சென்னை கோயம்பேட்டில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் கிருமிநாசினி கொடுத்து கைகளைச் சுத்தப்படுத்திய பிறகு பஸ்சில் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.மாவட்டங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதே போல், சென்னை-கோவை இடையே இரவு நேரச் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.