புதிய கல்விக் கொள்கை.. நாட்டின் கொள்கை.. பிரதமர் மோடி பேச்சு
புதிய கல்விக் கொள்கையை அரசின் கொள்கையாகப் பார்க்காமல், நாட்டின் கொள்கையாகப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியைக் கொண்டு வருவதற்காக, புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மீது பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு, இன்று(செப்.7) காலையில் காணொளி மூலமாக நடைபெற்றது. உயர்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் புதிய கல்விக் கொள்கையின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், முக்கிய விருந்தினராகப் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அவர் பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கு இந்த புதிய கல்விக் கொள்கை மிக முக்கியமானதாகும். இந்த கொள்கையை அமல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பங்கு உண்டு. நாட்டில் அறிவார்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், அதில் சாதாரண குடும்பத்தினரும் இணைந்து கற்கவும் இந்த கொள்கை வழிவகை செய்யும்.ராணுவக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை எப்படி அரசின் கொள்கையாகப் பார்க்காமல் நாட்டின் கொள்கையாகப் பார்க்கிறோமோ, அதே போல் கல்விக் கொள்கையையும் பார்க்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்விக் கொள்கையாக பார்க்கின்றனர்.இந்த கொள்கையை வகுத்துக் கொடுப்பதில் கல்வியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. மாணவர்கள் வெறுமனே பாடங்களை மட்டும் படித்து விட்டுச் செல்லாமல், புதிய விஷயங்களை கற்று ஆய்வு செய்யும் வகையில் இந்த புதியக் கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இது மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கருத்தரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால், மாநில கவர்னர்கள் கலந்து கொண்டனர்.