இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 லட்சம் தாண்டியது.. உலகில் 2வது இடம்..
கொரோனா தொற்று பாதிப்பில் பிரேசிலை முந்தி 2வது இடத்திற்கு வந்த இந்தியாவில் தற்போது நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்கு பரவியிருக்கிறது. நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருந்த பிரேசிலை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்தியா முந்தியது. தற்போது, அமெரிக்காவில் 64 லட்சத்து 60,250 பேரும், பிரேசிலில் 41 லட்சத்து 37,606 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த 2 நாளாக புதிதாக 90 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று நாளில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 42 லட்சத்து 4614 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 லட்சத்து 50,429 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 8 லட்சத்து 82,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1016 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 71,642 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று 7 லட்சத்து 20,362 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரை 4 கோடி 95 லட்சத்து 51,507 பேருக்கு சோதனை செய்யப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது