மெர்சல் படத்திற்கு அடுத்த சோதனை - வழக்கு தொடர்வோம் என பாஜக எச்சரிக்கை

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியாவிற்கு எதிரான காட்சிகளை நீக்கவில்லை என்றால் வழக்குத் தொடர்வோம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தலைப்பு முதல் தியேட்டர் ரிலீஸ் வரை பலகட்ட சோதனைகளை கடந்து தீபாவளி அன்று வெளியானது விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம். ரீலிஸுக்கு இரண்டு நாள் முன்பு கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் விஜய். ஆனாலும், படத்திற்கு சோதனை தீரவில்லை.

படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி போர்க்கொடி தூக்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். சென்னை திருவொற்றியூரில், பாஜக சார்பில் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மெர்சல் படத்தில் இருந்து ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

More News >>