ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளரா நீங்கள்... வங்கி கணக்குக்கு வருகிறது ஆபத்து.
By Augustin
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 24,000 கிளைகளுடன் 42 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும்.
பாரத ஸ்டேட் வங்கியானது, குறைந்தபட்ச இருப்புத்தொகையில் தனது வங்கி கணக்கை பராமரிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி வருகிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என அறிவித்தது. அதன்படி, பெரு நகரங்களில் வாழ்பவர்கள் ரூ.5000, நகரங்களில் வாழ்பவர்கள் ரூ.3000, சிறுநகர்களில் வசிப்போர் ரூ.2000, கிராமப்புறங்களுக்கு ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. மேலும், இந்தத் தொகையில் 50-75% குறைந்தால் ரூ.75 அபராதம் மற்றும் சேவை வரியும், 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், ரூ. 50 அபராதம் மற்றும் சேவை வரி வசூலிகப்படும் என்று வாடிக்கையாளர்கள் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டது.
விஜய் மல்லையா போன்ற பல தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்து ஏமாந்த இழப்புகளை சரிகட்ட, மக்கள் மீது இதுபோன்ற அபராத நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டது இந்த வங்கி. இதுபோன்ற அபராத நடவடிக்கைகளால் பலர் தானாக முன்வந்து தனது கணக்குகளை ரத்து செய்துகொண்ட சம்பவங்களும் நடந்தேறின. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு அந்த வங்கி குறைந்தபட்ச இருப்பின் அளவை சற்று குறைத்து அறிவித்தது.
அதன்படி, மாநகரங்கள் ரூ.3,000, சிறு நகரங்கள ரூ.2,000, கிராமங்கள் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டது. இன்றுவரை அந்நிலை தொடர்ந்து வருகிறது.
இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது. இந்த அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடந்த 8 மாதங்களில் அந்த வங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளது. வங்கியின் லாபமே அபராதத்தில் தான் ஓடியது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். வங்கி மீது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் அபராதத் தொகை மட்டும் சற்று குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்படி,
மாதாந்திர அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட போகிறது. சிறுநகரங்களில் அபராதமாக வசூலிக்கப்பட்ட ரூ.40 இனி ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களில் பலரது வங்கி கணக்குகளில் சுத்தமாக பணம் இருக்காது என்பதால் அவர்களிடம் எப்படி அபராதம் வசூலிப்பது என யோசித்த வங்கி நிர்வாகம் ஒரு அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கையில் கடந்த ஓராண்டு காலமாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சுமார் 41 இலட்சம் கணக்குகளை ரத்து செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களின் நிலைமை குறித்து கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியா, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பை பராமரிக்காதவர்ளுக்கு அபராதம் விதிக்கப் படுவதாகவும், மேலும் 2017 ஏப்ரல் மாதம் முதல் 2018 ஜனவரி மாதம் வரை, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத, 41 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பதில் வாடிக்கையாளர் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உயிரோட்டமாக உள்ளதா என்பதை சோதனை செய்துகொள்வது நல்லது மக்களே..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com