நான் பொறுப்பேற்க மாட்டேன்.. பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணியன் சுவாமி!
சுப்பிரமணியன் சுவாமி, எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஜனதா கட்சியில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் மட்டுமில்லாமல் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும், அவ்வப்போது விமர்சிப்பதில் தவறவில்லை சுப்பிரமணியன் சுவாமி. இப்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தனது சொந்தக் கட்சியின் ஐடி விங் மீது அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ``பாஜக ஐடி விங் முரட்டுத்தனமாகி விட்டது. அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது பாஜக உறுப்பினர்கள் போலி டிவிட்டர் கணக்குகளை ஓப்பன் செய்து அதில் இருந்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களின் செயலுக்குக் கோபமடைந்து என்னை பின் தொடர்பவர்கள் பதிலடி கொடுக்க தனிப்பட்ட தாக்குதல் மேற்கொண்டால், பாஜகவின் முரட்டுத்தனமான செயல்களுக்கும் பாஜக பொறுப்பேற்க முடியாதது போல, என்னைப் பின்தொடர்பவர்களின் செயலுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்" என்று அதிரடியாக கூறியுள்ளார்.