குலாம் நபி ஆசாத்தை எதிர்த்ததால் காலியான பதவி.. காங்கிரஸில் புது சிக்கல்!

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற சர்ச்சை ஓயாது போல் இருக்கிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தொடங்கிய இப்பிரச்சனைக்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்குச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய தலைமை வேண்டும் என்று, மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அக்கடிதம் சோனியா காந்தி உடல் நிலை சரியில்லாத போது எழுதப்பட்டதால், ராகுல் காந்தி கடுப்பாகி, காரிய கமிட்டி கூட்டத்திலேயே, ``பாஜகவுடன் மூத்த தலைவர்கள் ரகசியமாக உறவு வைத்துள்ளார்கள்" என்று குற்றச்சாட்டு சுமத்தினார். இதன்பின் அப்படிப் பேசவில்லை என அவர் விளக்கம் கொடுக்க, சோனியா காந்தியே மேலும் 6 மாதங்களுக்கு இடைக்காலத் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகுனாலும் சர்ச்சை தீரும் என்று பார்த்தால், அதுதான் இல்லை. தற்போது உத்தரப்பிரதேச காங்கிரஸில் குழப்பங்கள் எழுந்துள்ளது. சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதியதற்காகக் குலாம் நபி ஆசாத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை விடுத்த முன்னாள் எம்.பி. சந்தோஷ் சிங் உட்பட 10 பேர் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த 10 பேருமே குலாம் நபி ஆசாத் மீது குற்றம் சாட்டி சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சிக்காக உழைத்த எங்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குலாம் நபி ஆசாத் போன்றோர் கேள்வி எழுப்பவில்லை. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மாநிலத் தலைமை நீக்க முடியாது. எங்கள் விஷயத்தில் சோனியா காந்தி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர். இது தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>