கொரோனா முன்கள பணியாளராக மகள்.. அமைச்சர் பகிர்ந்த வேதனை!
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நர்ஸ் ஒருவர் ஒரு மாதமாக தன் குழந்தையை பிரிந்து கொரோனா வார்டில் பாணியாற்றியதும், பல நாட்கள் கழித்து அந்த நர்ஸை மகள் பாசமாக பார்த்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதேபோன்று தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார். இவரின் மகள் திஷா குமார் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கொரோனா பரிசோதனைகளை கவனித்து வருகிறார் திஷா. இதனால் வீட்டுக்கு 3 நாள்களுக்கு ஒருமுறை தான் வருகிறார். இதனால் இவரின் ஒரு வயது மகள் மகன், அமைச்சர் சுரேஷ் குமார் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, 3 நாள்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் திஷா, தனது மகனை தொட்டு தூக்க முடியாமல், வீட்டின் வாசலில் நின்றே மகனை பார்த்து செல்கிறார். அப்போது தாயிடம் செல்ல துடிக்கிறார் அவரின் ஒரு வயது மகன்.
இந்த கண் கலங்கும் காட்சிகளை அமைச்சர் சுரேஷ் குமார் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``கொரோனாவை தடுக்க, முன்கள பணியாளராக பணியாற்றும் திஷா தனது மகனை கூட தொட முடியாமல் தூரத்தில் நின்று கலங்கிய கண்களோடு பார்த்துவிட்டு செல்கிறார். தினமும் இந்த சம்பவம் நடக்கிறது. தினமும் தாயிடம் போக வேண்டும் என விக்ராந்த் அழுது துடிக்கிறான். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவனின் பாட்டி அவனை தாயிடம் விடுவதில்லை. இந்த காட்சி என் இதயத்தை கலங்க வைக்கிறது" என உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.