மீண்டும் முதலிடம் பிடித்த ஆந்திரா ?

மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 அடிப்படையில், எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி என பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, இந்த தரவரிசை பட்டியலை தொழில் வர்த்தக மந்திரி பியூஸ் கோயல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்னிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்த பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. 2018-ம் ஆண்டும், ஆந்திராதான் முதல் இடத்தை பெற்றிருந்தது. இரண்டாவது இடம், உத்தரபிரதேச மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் தெலுங்கானா உள்ளது.

4-வது இடம் மத்திய பிரதேசத்துக்கும், 5-வது இடம் ஜார்கண்டுக்கும், 6-வது இடம் சத்தீஷ்காருக்கும், 7-வது இடம் இமாசலபிரதேசத்துக்கும், 8-வது இடம் ராஜஸ்தானுக்கும், 9-வது இடம் மேற்கு வங்காளத்துக்கும், 10-வது இடம் குஜராத்துக்கும் கிடைத்துள்ளது.தமிழகத்துக்கு இந்த தர வரிசை பட்டியலில் 14-வது இடம் கிடைத்திருக்கிறது. 2018-ம் ஆண்டு 15-வது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது ஒரு இடம் முன்னேறி உள்ளது.

டெல்லிக்கு 12-வது இடமும், மராட்டியத்துக்கு 13-வது இடமும், கர்நாடகத்துக்கு 17-வது இடமும், புதுச்சேரிக்கு 27-வது இடமும், கேரளாவுக்கு 28-வது இடமும் கிடைத்துள்ளது.பட்டியலில் கடைசி இடமான 29-வது இடத்தில் அருணாசலபிரதேசம், சண்டிகார், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா ஆகியவை உள்ளன.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்டியலை வெளியிட்டு பேசும்போது, “மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டத்தில் இணைந்து செயல்படுவதின்மூலம், ஆத்மநிர்பர் பாரத்தின் (தற்சார்பு இந்தியா) இலக்கை அடைய மாநிலங்கள் முன்னோக்கி நடைபோடுகின்றன. ஆத்மநிர்பர் பாரத் என்பது இந்தியாவை உள்நோக்கி பார்ப்பதற்காக அல்ல. அது நமது வலிமையை வளர்த்து கொள்வதற்காகத்தான். இது நாம் அதிக போட்டித்தன்மையுடன் இருக்ககூடிய வழிகளில் ஒன்றாகும்” என குறிப்பிட்டார்.

More News >>