கட்டிலில் கட்டிப் போட்டு விடிய விடிய பலாத்காரம் செய்த கொடூரம்
கேரளாவில் கடந்த இரு தினங்களாக இரண்டு இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு கொரோனா பாதித்த ஒரு இளம்பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி ஒரு சுகாதார ஆய்வாளர் இளம்பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. கொல்லம் மாவட்டம் குளத்துப்புழாவை சேர்ந்த அந்த இளம்பெண் ஹோம் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து 2 வாரம் தனிமை காலத்தை முடித்த பின்னர் இவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்குவதற்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த சுகாதார ஆய்வாளர் பிரதீப்பிடம் சென்று விவரத்தைக் கூறினார். தனது வீட்டுக்கு வந்தால் சான்றிதழ் தருவதாக அவர் கூறினார்.
அதை நம்பி அந்த இளம்பெண் சுகாதார ஆய்வாளர் பிரதீப்பின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் சென்றவுடன் பிரதீப் அந்த இளம்பெண்ணை தாக்கி கைகளை பின்புறம் கட்டிப் போட்டார். பின்னர் வாயில் ஒரு துணியை திருகி அவரை கட்டிலுடன் சேர்த்து கட்டிப் போட்டார். பின்னர் இரவு முழுதும் கொடூரமான முறையில் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலையில் தான் அந்த பெண்ணை அவர் விடுவித்துள்ளார். யாரிடமாவது கூறினால் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே நடமாடியதாக போலீசிடம் கூறி வழக்குப் பதிவு செய்ய சொல்வேன் என்று அவர் மிரட்டியுள்ளார். ஆனாலும் இந்த இளம்பெண் போலீசிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சுகாதார ஆய்வாளர் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.