கடிதம் போலியானது.. நான் வெளியிடவில்லை!.. அரியர் தேர்வு விவகாரத்தில் சூரப்பா
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவோ, `` அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே AICTE-ன் விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும். எனினும் இதில் அரசு முடிவெடுக்கும்" என்று கூறினார். இது புது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சூரப்பா அறிவிப்பு குறித்து, ``அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும்; அரசின் முடிவில் மாற்றமில்லை. சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாகத் திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ஏஐசிடிஇ எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை" என்று கூறியிருந்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்.
இப்போது அமைச்சர் கேட்ட அந்த கடிதம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ``அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. அரியர்ஸ் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ``இணையத்தில் வெளியான இந்தக் கடிதம் போலியானது. இதைத் தனது தரப்பிலிருந்து கடிதம் எதுவும் வெளியிடவில்லை" என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.