ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம்!
ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி அமைந்துள்ளது. நீரிணைவுப் பகுதியில் இயற்கையாக உருவாகும் மண்திட்டுதான், இந்த மேடான பகுதி என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பாக் ஜலசந்தி முதல், மன்னார் வளைகுடா வரையிலான இந்த பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால், இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வரும் கப்பல்கள் நேரடியாக வர முடியாமல், இப்போது வரை இலங்கையைச் சுற்றியே வந்து கொண்டிருக்கின்றன.
இதனால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு அதிகரிப்பதுடன், பயண நேரமும் 30 மணி நேரம் கூடுதலாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பாக் ஜலசந்தி முதல், மன்னார் வளைகுடா வரையிலான பகுதியில் 300 மீட்டர் அகலமும், 167 கி.மீ. நீளமும், 12 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாய் வெட்டுவது பற்றி 1960-ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு, இறுதியாக, 2005-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ‘சேது சமுத்திரத் திட்டம்’ என்ற பெயரில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ரூ. 2 ஆயிரத்து 427 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், புராணக் கதையில் வரும்- சீதையை மீட்க, இராமேஸ்வரம் – இலங்கை இடையே வானரங்களை வைத்து இராமர் கட்டிய பாலம் இது என்று கூறும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், அதை சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் இடிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தன.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என சுப்பிரமணியசாமியும், ராம கோபாலனும் வழக்கு தொடர்ந்தனர். இராமர் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த நவம்பர் மாதம், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேதுசமுத்திரத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பல் போக்குவரத்துத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், “நாட்டின் நலன் கருதி ஆடம் பாலம் அல்லது ராமர் பாலத்துக்கு எந்தவிதமான சேதமும், பாதிப்பும் ஏற்படாமல், சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும்; இதற்கான மாற்றுப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபடும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இராமர் பாலம் தொடர்பாக தாக்கலான பொதுநல மனுக்களை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com