92 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று நோட்டீஸ் ஒட்டிய மயில்(ஆ)சாமி
கேரளாவில் 92 வயது மூதாட்டியைக் கழுத்து அறுத்துக் கொன்ற பின்னர் அந்த விவரத்தை ஒரு தாளில் எழுதி வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கும்பழா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜானகி (92).இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே திருமணமாகி வேறு வேறு இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக உள்ள ஜானகிக்கு உதவி செய்வதற்காக மயில்சாமி (69), என்பவரையும், பூபதி என்ற பெண்ணையும், வேலைக்கு வைத்திருந்தனர்.இவர்கள் இருவரும் ஜானகியின் வீட்டிலேயே தங்கியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஜானகியின் வீட்டு சுவற்றில் பல பகுதிகளில் பேப்பர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதைக் கவனித்த அப்பகுதியினர் அருகில் சென்று அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை வாசித்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் 'ஜானகியைக் கொன்று விட்டேன், நான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன், இப்படிக்கு மயில்சாமி' என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். எஸ்பி சைமன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜானகியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மயில்சாமியைக் கைது செய்தனர். அவர் எதற்காக ஜானகியை கொலை செய்தார் என்று தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று ஜானகியின் வீட்டில் இருந்த பூபதி தனது வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் அன்று இரவு மயில்சாமி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். கொலை செய்த பின்னர் அந்த விவரத்தை எழுதி வீட்டுச் சுவரில் எழுதி வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.