சீன அடையாளத்தை துறக்கிறதா பப்ஜி?
சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். இது தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது. இதன் இந்திய விநியோக உரிமத்தைச் சீனாவிலுள்ள டென்சென்ட் கேம்ஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது.
பயனர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு, தரவு தனியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 118 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டன. பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயனரின் தரவு குறித்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எங்கள் நிறுவனம் முழுமையான புரிந்துகொண்டுள்ளது; அதை மதிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் முன்னுரிமையும் அதுதான். இந்தியச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு முழுவதும் உட்பட்டு, மீண்டும் விளையாட்டு பிரியர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் இந்திய விநியோக உரிமையை ரத்து செய்து விட்டு இந்தியாவுக்கான எல்லா வெளியீட்டுப் பொறுப்பினையும் பப்ஜி நிறுவனம் தானே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், வரும் காலத்தில் இந்தியாவுக்கேற்ற ஆரோக்கியமான விளையாட்டு சூழலை விளையாட்டு பிரியர்களுக்கு உருவாக்கித் தருவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.