நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா.. தெலங்கானா சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம்..

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ். இவரது ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கின. தற்போது அவரது நூற்றாண்டு விழாவை தெலங்கானாவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா சட்டசபையில் இன்று(செப்.8) முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் அவரது படத்தைத் திறக்க வேண்டும். அவரது ஆட்சிக்காலத்தில் ஐதராபாத்தில் திறக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த தீர்மானம் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் சந்திரசேகர ராவ் பேசும் போது, நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் முதன்முதலாகப் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது அவருக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய அரசு அளிக்கவில்லை. தெலங்கானாவில்தான் நாம் அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம் என்றார் .

More News >>