ஐ ஏ எஸ் அதிகாரியின் டார்ச்சரால் ஆட்டோ டிரைவரான அரசு டாக்டர்
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் ஒரு அரசு டாக்டர் ஆட்டோ வாங்கி ஓட்டும் சோக சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள தாவனகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (53). இவர் பெல்லாரி அரசு குழந்தைகள் நல மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 24 வருடப் பணி அனுபவம் உண்டு.கடந்த 2009ம் ஆண்டு சிறந்த டாக்டராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பகுதியில் இந்த டாக்டருக்கு நல்ல பெயர் உண்டு.கைராசியான டாக்டர் என்ற பெயர் கிடைத்ததால் இவரிடம் சிகிச்சைக்காகத் தினமும் ஏராளமானோர் சென்றனர்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தான் இவருக்குச் சனி திசை தொடங்கியது. அப்போது பெல்லாரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைமை நிர்வாக அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். டாக்டர் ரவீந்திரநாத்தை ஒரு நாள் தொடர்பு கொண்ட அந்த ஐஏஎஸ் அதிகாரி, தன்னுடன் படித்த ஒரு நண்பரைத் தேசிய சுகாதார அமைப்பில் சிறப்பு டாக்டராக நியமிக்கச் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு ரவீந்திரநாத் மறுத்துவிட்டார். இது அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் சுகாதாரத்துறை சார்பில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை அனைவரின் முன்னிலையிலும் கடுமையாகக் குற்றம் சாட்டி பேசி வந்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பலமுறை நோட்டீசும் கொடுத்தார். அப்படியும் அந்த அதிகாரிக்கு ஆத்திரம் தீரவில்லை. கடந்த ஆண்டு ஜூன் முதல் ரவீந்திரநாத்தின் சம்பளத்தை நிறுத்தி வைத்துவிட்டார். 15 மாதங்களாகச் சம்பளம் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் ரவீந்திரநாத் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒரு ஆட்டோ வாங்கி தற்போது அவர் ஓட்டி வருகிறார். அந்த ஆட்டோவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் இந்த கதி ஏற்பட்டது என அவர் எழுதியுள்ளார்.