அப்பா என்றால் இப்படி இருக்கணும் மகனுக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது என்ன தெரியுமா?

இங்கிலாந்தில் ஒரு தந்தை தனது மகனுக்குக் கடந்த 28 வருடங்களாகப் பிறந்தநாள் பரிசாக ஃபுல் பாட்டில் விஸ்கி கொடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.இங்கிலாந்தில் உள்ள டோன்டன் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் மேத்யூ ராப்சனுக்கு இப்போது 28 வயது ஆகிறது. சிறுவயது முதலே தன்னுடைய மகன் மீது பீட்டருக்கு அலாதி பாசம் உண்டு. இதனால் மகனின் பிறந்தநாளுக்கு யாருமே கொடுக்காத வித்தியாசமான பரிசு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று பீட்டர் விரும்பினார். இதன்படி மகனின் முதலாவது பிறந்த நாள் முதல் சமீபத்தில் கொண்டாடிய 28வது பிறந்த நாள் வரை பீட்டர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? விலை உயர்ந்த மிக அரிய வகை விஸ்கியான மக்காலன் என்ற சிங்கிள் மால்ட் விஸ்கியைத் தான் தனது மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக அவர் கொடுத்து வந்தார்.

தனது தந்தையின் அன்புப் பரிசு என்பதால் அந்த விஸ்கியை குடிக்கவோ, வேறு யாருக்கும் கொடுக்கவோ ராபின்சனுக்கு மனது வரவில்லை. வருடந்தோறும் கிடைக்கும் அந்த பிறந்தநாள் பரிசை அவர் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அது தந்தை பீட்டருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி 28 பாட்டில்கள் ராப்சனிடம் சேர்ந்துவிட்டன. அப்போது தான், அது விலை உயர்ந்த அரிய ரக விஸ்கி என்பதால் அனைத்தையும் விற்பனை செய்தால் பெரும் பணம் கிடைக்குமே என்ற எண்ணம் ராப்சனுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து தன்னிடமுள்ள மக்காலன் விஸ்கி விற்பனைக்கு இருப்பதாக அவர் ஆன்லைனில் விளம்பரம் செய்தார். விளம்பரத்தைப் பார்த்ததும் அதை வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டிப் போட்டனர். 28 வருடத் தொடர்ச்சியான மக்காலன் விஸ்கி பாட்டில் சேகரிப்பு என்பதால் இது மிக அபூர்வமாகக் கருதப்பட்டது. இதுதான் அனைவரையும் அந்த பாட்டிலை வாங்கத் தூண்டியதற்குக் காரணமாகும். இதையடுத்து ஒருவர் 28 பாட்டில்களுக்கும் ₹ 39 லட்சம் விலை பேசி வாங்கிக் கொண்டார். அதைவிடக் கூடுதல் விலை கொடுத்து வாங்கக் கூட ஆட்கள் தயாராக இருந்தார்களாம். இந்தப் பணத்தை வைத்து ஒரு வீடு வாங்கவும் ராப்சன் திட்டமிட்டுள்ளார். இதைப் படிக்கும்போது இப்படி ஒரு அப்பா தங்களுக்கு இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரத்தான் செய்யும்.

More News >>