வீடியோ கேமில் தோற்றதால் கொலை - பரபரப்பு சம்பவம்...!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீடியோ கேமில் தோற்றதால் ஆத்திரமடைந்து 9 வயது சிறுமியை 11 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பலரும் ஸ்மார்ட் போன்களை வாங்குவதே வீடியோ கேம் விளையாடுவதற்காகத் தான். சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர் வரை வீடியோ கேம் விளையாடித் தான் பொழுதை போக்குகின்றனர். தொடர்ச்சியாக இதை விளையாடுவதால் மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கும் என்றாலும் இந்த விளையாட்டை யாரும் கைவிட தயாராக இல்லை.
இந்நிலையில் இந்த வீடியோ கேம் ஒரு 11 வயதான சின்னஞ்சிறுவனை கொலையாளியாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள லசுதியா என்ற இடத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்த 11 வயது சிறுவனும், 9 வயது சிறுமியும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த விளையாட்டின் படி ஒருவர் தோற்றால் வெற்றி பெற்றவர் அவரை அடிக்க வேண்டும். இதன்படி பலமுறை தோற்ற அந்த சிறுவன் அந்த சிறுமியிடமிருந்து அடிமேல் அடி வாங்கினான்.
தன்னை அந்த சிறுமி அடித்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அந்த சிறுமியை அருகிலுள்ள வயல் பகுதிக்கு அழைத்து சென்று அங்கிருந்த கல்லால் தலையில் பலமாக தாக்கி விட்டு ஓடி விட்டான். பின்னர் அந்த சிறுவன் தனது வீட்டுக்கு சென்று கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டான்.
நீண்ட நேரமாக இருவரையும் காணாததால் வீட்டினர் அவர்களை தேடிப் பார்த்தபோது அந்த சிறுமி வயலில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்தபோது அந்த சிறுமியுடன் விளையாடிய சிறுவனை காணவில்லை என தெரியவந்தது. இதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த சிறுவன் வீட்டுக் கழிப்பறையில் ஒளிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் அந்த சிறுவனை நைசாக பேசி வெளியே கொண்டு வந்து விசாரித்தபோது தான் சிறுமியை கொலை செய்தது அந்த சிறுவன் தான் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். வீடியோ கேம் மூலம் 9 வயது சிறுமியை 11 வயது சிறுவன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.