வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம்!.. எடப்பாடியை பாராட்டிய தமிழிசை
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செப்.8ம் தேதியான இன்று தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தேசிய கண்தான தினத்தையொட்டி, அவர் கண் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கண்தானம் செய்வதற்கான சான்றிதழை அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வழங்கியுள்ளது. பொது மக்கள் மத்தியில் கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்து முன்னுதாரணமாக இருப்பதாக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ``ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கண்தானம் செய்வோம்!" என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். முதல்வரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் எடப்பாடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. முதல்வரின் இச்செயலால் பொதுமக்களும் தானாக முன்வந்து தனது கண்களை தானம் செய்வார்கள். இதனால் லட்சக்கணக்கான பார்வையில்லாதவர்கள் பயன் அடைவார்கள். கண் தானம் செய்வதால் வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் நாம் ஒளி ஏற்றலாம். எனவே அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.