எங்களுக்கு புதிய ஹெட் மாஸ்டர்.. கிறிஸ் கெயில் ஜாலி!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி வீரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு உற்சாகமாக களம் கண்டு வருகின்றனர். இதேபோல் மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்கள் இன்றி மேட்ச் நடைபெற இருப்பதால், அந்த சோகத்தை தீர்க்க வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

இதற்கிடையே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், தனது அணி நிலைமை குறித்து பேசியுள்ளார். அதில், ``இந்த சீசனில் எங்களின் கேப்டனாக கேஎல் ராகுல் பொறுப்பேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அவரைப் போலவே எங்கள் அணிக்கு புதிய ஹெட் மாஸ்டர் கிடைத்துள்ளார். ஆம், அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக வந்துள்ளார். மேலும் சில புதிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். இவர்களுடன் பயணிக்க இருப்பது சிறப்பான விஷயம்.

நாங்கள் திரும்பவும் எங்கள் வகுப்பறைக்கு வந்துவிட்டோம். அணியில் இணைந்தபோதே தனிமைப்படுத்தினார்கள். இந்த முறை வழக்கமானதாகிவிட்டது. தனிமைப்படுத்தல் காலம் எனக்கு சிறந்த அளவில் ரிலாக்ஸ் கொடுத்தது" என்று ஜாலியாக பேசியுள்ளார்.

More News >>