கோவையில் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஹோட்டல்...இதுதான் காரணம்...!
கோவையில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள், அனைவரும் சமம் என்ற சமூக தத்துவங்களில் நாட்டிலேயே முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த மாநிலம்தான், ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்றும், மூன்றாம் பாலினத்தவரைத் திருநங்கைகள் என்றும் பெயரில் கூட பெருமையை அளித்த மாநிலம். சமூகத்தில் ஒதுக்கப்படும் திருநங்கைகள் பிச்சை எடுப்பது மற்றும் இதர தொழில்களில் ஈடுபட்டது ஒருகாலம். இப்போது அவர்கள் எல்லா துறைகளிலும் முன்னேறுகிறார்கள்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். கோவை டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரிலான இந்த ஓட்டலை கோயம்புத்தூர் திருநங்கைகள் சங்கத்தின் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சங்கத்தின் தலைவர் சங்கீதா கூறுகையில், எங்கள் சமூகத்தினர் இனிமேலும் பிச்சை எடுப்பது போன்ற தொழிலில் ஈடுபடக் கூடாது. நாங்களும் சுயமாகச் சம்பாதித்து கவுரவமாக வாழ முடியும் என்பதை வெளிக்காட்டுவோம். விரைவில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கவுள்ளோம். எங்களைப் போன்ற சங்கத்தினர் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டும். அதன்மூலம், அனைத்து திருநங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமையும் என்று தெரிவித்தார்.