திருவனந்தபுரம் தூதரக தங்கக் கடத்தல் கோவை நகைக்கடைகளில் என்ஐஏ அதிரடி சோதனை
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள நகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது . இந்த கடத்தலுக்கு துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் ஆகியோர் தான் முக்கிய காரணம் என தெரியவந்தது. இதையடுத்து இவர்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கைது செய்தது. இவர்கள் அளித்த தகவலின் பேரில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இதற்கு முன்பும் இவர்கள் பலமுறை தூதரக பார்சலில் 200 கிலோ வரை தங்கம் கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தல் தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் தான் இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏவும் விசாரணை நடத்தியது. மேலும் இவ்வாறு கடத்தப்படும் தங்கம் தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, கோவை உட்பட இடங்களில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள் திருச்சி மற்றும் சென்னையில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோவையில் உள்ள சில நகைக் கடைகளிலும் இந்த கடத்தல் தங்கத்தை வாங்கி இருப்பதாக விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவையில் உள்ள சில நகைக் கடைகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நந்தகுமார் என்ற நகைக்கடை உரிமையாளரை என்ஐஏ கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சமீப காலம் வரை சாதாரணமாக இருந்த இவர் திடீரென பெரும் பணக்காரராகி விட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். கடத்தல் தங்கத்தை வாங்கித் தான் இவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.