வட்டிமட்டும் ரூ.243 கோடி... கலாநிதி மாறனுக்கு அடித்த ஜாக் பாட்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனான கலாநிதி மாறன் 2010ல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை வாங்கி, கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்பைஸ் ஜெட்டை நடத்தி வந்தது அனைவருக்கும் தெரியும். 2015 ஆம் ஆண்டு வரை விமான நிறுவனத்தை நடத்தி வந்தார் கலாநிதி. அதுவரை ஸ்பைஸ் ஜெட்டின் பெரும் பகுதி பங்குகள் கலாநிதி மாறனினிடம் தான் இருந்தது. 2015ல் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஸ்பைஸ் ஜெட்டின் 58.46 சதவிகித பங்குகளை அஜய் சிங் என்பவருக்கு விற்றார்.

அப்போது, 679 கோடி ரூபாயை பல்வேறு காரணங்களுக்காக அஜய் சிங்கின் தலைமையின் கீழான ஸ்பைஸ் ஜெட்டுக்கு கொடுத்ததாகவும், அந்தத் தொகை திரும்ப தரப்படவில்லை என்றும்கூறி கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட வருடமாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தது.

பல நாட்களாக விசாரணையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கொடுக்கப்பட்டது. அதில், ``ஆறு வார காலத்திற்குள் ரூ.242.93 கோடியை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு வழங்க வேண்டும். ஸ்பைஸ் ஜெட் ஏற்கனவே நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ள ரூ .579 கோடிக்கு வட்டியாக இந்த தொகையை கொடுக்க வேண்டும். ஆறு வாரங்களுக்குள் தொகையை வழங்கத்தவறினால், ஸ்பைஸ் ஜெட்டின் நிலையை அறிந்துகொள்ள கலாநிதி மாறன் நீதிமன்றத்தை அணுகலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

More News >>