மூணாறில் காட்டு எருமைக்காக விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது.
மூணாறு அருகே கன்னிமலை தேயிலை தோட்டம் உள்ளது. இது வனத்தை ஒட்டி உள்ள பகுதியாகும். இப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் உள்ளன. இவர்கள் காட்டுப் பன்றி, எருமைகள் உட்பட விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வேட்டைக் கும்பல் காட்டு எருமைகளை பிடிப்பதற்காக கன்னிமலை தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வலை விரித்திருந்தனர்.ஆனால் அந்த வலையில் காட்டு எருமைக்கு பதிலாக ஒரு சிறுத்தை சிக்கியது. அப்பகுதிக்கு அதிகமாக ஆட்கள் யாரும் செல்லாததால் இந்த விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சில தொழிலாளர்கள் வலையில் சிறுத்தை சிக்கி கிடப்பதை பார்த்தனர்.
இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்த சிறுத்தை வலையில் சிக்கியதால் காயமடைந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுத்தை வலையில் சிக்கியிருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். அதன் உடலை மீட்டு வனத்துறையினர் பிரேத பரிசோதனை நடத்தி வனப் பகுதியிலேயே புதைத்தனர். இறந்த அந்த சிறுத்தைக்கு நான்கு வயது இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.