rdquoகமல், நீங்கள் கவுரவ டாக்டர் தான், நிஜ டாக்டர் அல்லrdquo - சித்த மருத்துவர் சங்கம் காட்டமான அறிக்கை
நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமல் தன்னுடைய ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுக்கோள் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அதில் அவர்கள் கூறியிருப்பதவது:-
”கமல் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.உங்கள் அரசியல் ஆசைக்கு, வளர்ச்சிக்கு தயவு செய்து நிலவேம்பு கசாயம் குடிப்பதை இழுக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு செயலும், கருத்தும் சமீபத்தில் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பது என்கிற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளது.
உங்களுக்கு தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள நீங்கள் நிலவேம்பு குடிநீர் பற்றிய உங்கள் சந்தேகம் தீர சென்னையில் உள்ள ஏதாவது ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம், அல்லது நேரிடையாக சுகாதார துறை அமைச்சர் வேண்டாம் உங்களுக்கு தான் இந்த அரசை பிடிக்காதே, அதனால் சுகாதார துறை செயலாளர் அல்லது பத்திரிக்கை துறை நண்பர்களிடம் கேட்டு இருக்கலாம்.
இதை எல்லாம் விடுத்து நிலவேம்பை ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை குடிக்க வேண்டாம் என உங்கள் ரசிகர்களுக்கு உத்தரவு இட்டுள்ளீர்கள். கமல் அவர்களே தாங்கள் கவுரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்று இருக்கீங்க; நிஜ டாக்டர் இல்லை. ஒருவகையில் நிலவேம்பை பற்றி தெரியாமல் கருத்தை பதிவு செய்த நீங்களும் ஒரு போலி மருத்துவர் தான் அய்யா. சித்த மருத்துவர்களில் பலர் உங்கள் ரசிகர்கள் தான். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு சித்த மருத்துவரும் உங்கள் கருத்தால் மிகுந்த மன வேதனை கொண்டு உள்ளனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏன் எனில் நீங்கள் வாழும் சமூகம் வேறு; நாங்கள் கசாயம் வழங்கும் இடத்தில் உள்ள சமூகம் வேறு. நீங்களும் நிலவேம்பு கசாயமும் தான். சமீப காலங்களில் அதிக கல்லடி, ஏளன பேச்சுகள் என இரண்டுமே அதிக பாதிப்புக்கு உள்ளானது. என்ன உங்களுக்கு வாய் இருக்கிறது செய்ய மாட்டீர்கள் என்று எங்கள் எல்லோருக்கும் ,ஏன் உங்களுக்கே கூட தெரியும் இருந்தும் இந்த நாட்டை விட்டே போய் விடுவேன் என்று நீங்கள் பொய் சொல்லவில்லையா?
ஒரு பிரபலத்தை கூப்பிட்டு கமல் நடிப்பு சரியில்லை அவருக்கு நடிப்பு திறமை இல்லை எனவே ஓரு நிபுணர் குழுவை அமைத்து அதன் அறிக்கை வந்த பின் அவரை நடிக்க அனுமதிக்கலாம் என்று சொன்னால் எல்லோரும் சிரிக்க மாட்டார்கள்.
அது போல தான் இருக்கு உங்கள் அறிவிப்பும். எத்தனையோ தடை செய்யப்பட்ட மருந்துகள் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது. அதை எல்லாம் கண்டு கொள்ளாத நீங்கள் நிலவேம்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? ஏன் இந்த கபட அரசியல்? நோய் இல்லாமல் வாழ வழி சொன்ன சித்த மருத்துவமா ஐயா நோய்க்கு வழங்கும் மருந்தில் நச்சை வைத்து விட போகிறது.
இனிமேலும் இது போன்ற அரை வேக்காட்டுத்தனமான பேச்சுகளை விட்டு உங்கள் தொழிலான நடிப்பை மட்டும் பாருங்கள். தேவை இல்லாமல் மருந்துகளை பற்றி பேசி போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.