ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டி கொன்றவர்
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள கும்பழாவில் 92 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூதாட்டிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வேறுவேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் ஜானகி தனிமைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு உதவுவதற்காக அவரது பிள்ளைகள் அப்பகுதியை சேர்ந்த புஷ்பா(60) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர். சில மாதங்கள் கழித்து புஷ்பா வீட்டு தோட்ட வேலை செய்வதற்காக அவரது உறவினரான மயில்சாமி (62) என்பவரை ஜானகியின் வீட்டுக்கு அழைத்து வந்தார். இவர்கள் இருவரும் ஜானகிக்கு தேவையான பணிவிடைகளை செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜானகியை பார்த்துக் கொள்ளுமாறு மயில்சாமியிடம் கூறிவிட்டு புஷ்பா தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் காலை மயில்சாமி பக்கத்து வீட்டுக்கு சென்று ஒரு பேப்பரை எழுதி கொடுத்துள்ளார். அதை வாங்கிப் படித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜானகியை தான் கொன்று விட்டதாகவும், சிறைக்கு செல்ல தான் தயாராக இருப்பதாகவும் அதில் மயில்சாமி எழுதியிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதையடுத்து பக்கத்து வீட்டினர் ஜானகியின் வீட்டுக் கதவை தட்டியபோது, போலீஸ் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று மயில்சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் அவர் கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஜானகி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து மயில்சாமியை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.அப்போது அவர் கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புஷ்பாவை திருமணம் செய்ய மயில்சாமி விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அவர் சிறைக்கு சென்று நிம்மதியாக இருக்கலாம் என அவர் தீர்மானித்தார். சிறைக்கு செல்ல ஏதாவது காரணம் வேண்டுமே...... இதற்காகத் தான் ஜானகி நான் கொலை செய்தேன் என்று அவர் கூறினார். மயில்சாமி கூறியதைக் கேட்ட போலீசார் முதலில் அதை நம்ப முடியவில்லை. ஆனாலும் ஜானகி கொலை செய்தது மயில்சாமி தான் என்பது நிரூபணமானதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.