அறிவாலய ஏசியால் பரிதவித்த மூத்த தலைவர்.. பாதியிலேயே வெளியேறிய பரிதாபம்!

கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடந்தது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இன்றைய கூட்டத்துக்கு மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தார். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாததால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றதை அடுத்து அறிவாலயம் வந்த ஆற்காட்டார், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு ஒரு வருடம் கழித்து இன்றுதான் அறிவாலயம் வந்திருக்கிறார். நடப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டு மெதுவாக விழா நடந்த இடத்துக்கு வந்தவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் காலை 11 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார். இதுதொடர்பாக விசாரிக்கையில், விழா நடந்த அரங்கம் முழுக்க ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஏசியால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டு அரங்கில் அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாமலும், மூச்சு விடுவதில் சிரமப்பப்பட்டதை அடுத்து வீட்டிற்கு செல்வதாக கூறி பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார் ஆற்காடு வீராசாமி.

More News >>