இவைகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்...!

தாதுகள் நம் உடலின் செயல்பாட்டுக்கு மிகக்குறைந்த அளவு தேவைப்பட்டாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுகளை பற்றி நாம் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், சிலவற்றைப் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அறிந்திருக்கமாட்டோம். எந்த தாது என்ன வேலை செய்கிறது? அது எந்த உணவுபொருளில் உள்ளது என்பதை கீழே காணலாம்.

இரும்பு

இரும்புச் சத்து, பொதுவாக நாம் கேள்விப்படும் ஒன்று. உடலில் இரத்த அணுக்கள் புதிதாக உருவாகிறதற்கும், உடலின் செல்களுக்கும் திசுக்களுக்கும் உயிர்வளியை (ஆக்ஸிஜன்) எடுத்துச் செல்வதற்கும் இரும்புச் சத்து உதவுகிறது.

உலர் திராட்சை, பேரீச்சை, கீரைகள், சமைக்கப்பட்ட உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இரும்புச் சத்து தேவைப்படுவோர் உணவினை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடும் வழக்கமும் உள்ளது.

குரோமியம்

குரோமியம் என்று ஒரு தாது நம் உடலில் உள்ளது நமக்கே வியப்பான விஷயம். குரோமியம், உடலின் சர்க்கரையை சமநிலைப்படுத்தும் இன்சுலினின் செயல்பாட்டிலும் குளூக்கோஸின் வளர்சிதை மாற்றத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. கொலஸ்ட்ராஸ் செயல்பாடு மற்றும் மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது. குரோமியத்தின் அளவு குறைந்தால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், இருதய செயல்பாடும் தடைபடும். இருதய பிரச்னை, நீரிழிவு குறைபாடு உள்ளோருக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

முழு தானியங்கள், பால் சார்ந்த பொருள்கள், ஆப்பிள், வாழைப்பழம், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் குரோமியம் உள்ளது.

செம்பு

தாமிரம் பழங்காலத்திலிருந்தே அறியப்பட்டு வரும் தாது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் தாமிரத்தின் (செம்பு) பங்கு உள்ளது. இரும்புச் சத்தின் வளர்சிதை மாற்றம், மெலனின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு குரோமியம் உதவுகிறது. உடலில் செம்பின் அளவு குறைந்தால் தசை பலவீனம், இரத்த வெள்ளை அணுக்கள் குறைவு மற்றும் நரம்பியல் கோளாறு ஏற்படும்.

நட்ஸ் (கொட்டை வகைகள்), விதைகள் ஆகியவற்றிலும் சில சாக்லேட்டுகளிலும் செம்பு உள்ளது.

அயோடின்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு அயோடின் அவசியம். வளர்ச்சியோடும், வளர்சிதை மாற்றத்தோடும் தொடர்புடையது அயோடின். அயோடின் குறைபாட்டால் தைராய்டு சுரப்பி பெரிதாகிவிடும்.

கடல் உணவுகள், பால் பொருள்களில் அயோடின் காணப்படும்.

செலினியம்

அயோடினோடு செலினியமும் தைராய்டு செயல்பாட்டுடன் தொடர்புடையதாகும். தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதுடன் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளை கட்டமைப்பதிலும் செலினியம் முக்கிய பங்கு வகிக்கிறது. செலினியம் குறைபாடு மனநல மந்ததன்மை, குழந்தையின்மை, கூந்தல் உதிர்தல் போன்றவற்றுக்கு காரணமாகலாம்.

கடல் உணவு, இறைச்சி, பால் பொருள்கள், முட்டை, காளான், உருளைக்கிழங்கு மற்றும் சிவப்பரிசியில் செலினியம் அதிகம் உள்ளது.

இந்த தாதுகள் உடலில் குறையாமல் காத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

More News >>