தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 49,203 பேர்..

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6516 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 23,231 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 78 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8090 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 49,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.சென்னையில் நேற்று 993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 44,595 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 237 பேருக்கும், கோவையில் 445 பேருக்கும், கடலூரில் 344 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 287 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 171 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டில் இது வரை 29,231 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,789 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27,122 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 80,401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 53 லட்சத்து 66,204 பேருக்குச் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

More News >>