கூகுள் வெரிஃபைடு கால்ஸ்: மோசடி அழைப்பை தவிர்க்கலாம்

தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது.

இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் நிறுவனம் வெரிஃபைடு கால்ஸ் (Verified Calls) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் வெரிஃபைடு கால்ஸ் செயலி இருக்கும். தற்போதைய ஆண்ட்ராய்டு பயனர்கள் வரும் வாரங்களில் இதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அழைப்பு வரும்போது, வெரிஃபைடு கால்ஸ் செயலி, அழைப்பவரின் பெயர், நிறுவன இலச்சினை (லோகோ), அழைப்புக்கான காரணம், கூகுள் நிறுவனத்தின் மூலம் குறிப்பிட்ட அந்த வணிக நிறுவனத்தின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளம் ஆகியவற்றைக் காட்டும்.தொலைப்பேசி அழைப்புகள் குறித்த பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இத்தொழில்நுட்ப நடவடிக்கையில் சரிபார்க்கப்பட்ட பிறகு தனிப்பட்ட முறையில் கூகுள் நிறுவனம் அத்தகவல்களைச் சேகரித்து வைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, மோசடியான பணப்பரிவர்த்தனையைத் தடுக்கக்கூடிய வங்கிகளில் விழிப்புணர்வு அழைப்புகளுக்குப் பயனர்கள் வழங்கும் பின்னூட்டம் அதன் தரவரிசையை உயர்த்தும் என்று விளக்கப்பட்டுள்ளது.வெரிஃபைடு கால்ஸ் செயலி, அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேஸில், ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் முதலில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இம்முயற்சியில் நெஸ்டர், ஃபைவ்9, வோனேஜ், அஸ்பெக்ட், பேண்ட்வித், பிரெஸ்டஸ், டெலிகால் மற்றும் ஜஸ்ட்கால் போன்ற நிறுவனங்கள் தங்களோடு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

More News >>